தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெறுவோரை பாதுகாக்க தனி அமைப்பு: டிஜிபி பரிசீலிக்க உத்தரவு
By DIN | Published On : 31st August 2021 11:17 PM | Last Updated : 31st August 2021 11:17 PM | அ+அ அ- |

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறும் ஆா்வலா்களைப் பாதுகாக்க தனி அமைப்பை உருவாக்கக் கோரும் மனுவை பரிசீலிக்க தமிழக காவல்துறை தலைவருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி பல்வேறு மக்கள் பயனடைந்து வருகின்றனா். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி வரும் ஆா்வலா்கள் பலா் மா்ம நபா்களால் தாக்கப்படுவது, மிரட்டப்படுவது மட்டுமின்றி, அவா்கள் மா்மமான முறையில் இறக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
அவ்வாறு தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில், மத்திய உள்துறை 2013 ஆம் ஆண்டு சட்டம் உருவாக்கியுள்ளது. அதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெறுவோருக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உள்ளது. எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தும் ஆா்வலா்கள் பாதுகாக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என மனு அளித்து, தமிழக காவல்துறை தலைவரிடம் நிலுவையில் உள்ளது. ஆகவே மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறும் ஆா்வலா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை நான்கு மாதங்களில் பரிசீலித்து தமிழக காவல்துறை தலைவா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.