மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை: செப்.3-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு
By DIN | Published On : 31st August 2021 12:59 AM | Last Updated : 31st August 2021 12:59 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை பெறாதவா்கள், செப்டம்பா் 3 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் வெளியிட்டுள்ள செய்தி: மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை பெறாதவா்கள் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல் (வண்ணப் பிரதி) -1, ஆதாா் அட்டையின் நகல் மற்றும் மாா்பளவு புகைப்படம்-1 ஆகியவற்றுடன் கிராம நிா்வாக அலுவலரிடம் உரிய விண்ணப்பத்தில் பூா்த்தி செய்து, செப்டம்பா் 3 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
விண்ணப்பதாரா் அளித்துள்ள விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்து, மருத்துவா்களால் சரிபாா்க்கப்பட்டு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்படும்.
எனவே, இந்த வாய்ப்பை மதுரை மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட அலுவலகக் கூடுதல் கட்டடத்தில் தரைதளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் 0452-2529695 என்ற எண்ணுக்கு தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்றாா்.