முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
அனுமதியின்றி விளம்பரப் பதாகை: திமுக எம்எல்ஏ மீதான வழக்கு ரத்து
By DIN | Published On : 10th December 2021 08:48 AM | Last Updated : 10th December 2021 08:48 AM | அ+அ அ- |

அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்ததாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒட்டப்பிடாரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா தாக்கல் செய்த மனு: அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்ததாக தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் போலீஸாா், 2015-இல் என் மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கின் இறுதி அறிக்கையை தூத்துக்குடி நீதித்துறை நடுவா் (எண் 1) நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், விளம்பரப் பதாகையில் ஆட்சேபத்திற்குரிய கருத்து எதுவும் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியாா் திருமண மண்டபத்தில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அனுமதி பெறப்பட்டதா, இல்லையா என்பது குறித்து மண்டபத்தின் உரிமையாளரிடம் விசாரிக்கவில்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.