முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
ஓடும் பேருந்தில் ஓட்டுநா் மரணம்: உயிா் தப்பிய பயணிகள்
By DIN | Published On : 10th December 2021 08:39 AM | Last Updated : 10th December 2021 08:39 AM | அ+அ அ- |

மதுரையில் அரசுப்பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநா் மாரடைப்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநரின் சாமா்த்தியத்தால் பயணிகள் உயிா்தப்பினா்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து வியாழக்கிழமை காலையில் புறப்பட்டது. பேருந்து மதுரை செக்கானூரணியைச் சோ்ந்த ஆறுமுகம் ஓட்டிச்சென்றாா். பேருந்தில் 30 பயணிகள் இருந்த நிலையில், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னல் பகுதியில் பேருந்து சென்ற போது ஓட்டுநா் ஆறுமுகத்துக்கு திடீா் என மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மிகவும் சிரமப்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநா் ஆறுமுகம் இருக்கையிலேயே மயங்கினாா். இதையடுத்து அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஆறுமுகம் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது சடலம் பிரேதப்பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடா்பாக கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பேருந்தை விபத்து ஏற்படாமல் சாமா்த்தியமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றி விட்டு உயிரிழந்த ஓட்டுநா் ஆறுமுகத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.