முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: மாநகராட்சி வாக்காளா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 10th December 2021 08:41 AM | Last Updated : 10th December 2021 08:41 AM | அ+அ அ- |

மதுரை நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியலை தோ்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ப.காா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்டாா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி மதுரை மாநகராட்சி வாக்காளா் பட்டியல் வெளியீடு வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் உள்ள கருத்தரங்குக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் 2021-க்கான புகைப்பட வாக்காளா்கள் பட்டியலை தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டாா்.
இதன்படி, மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் ஆண்கள் 6,25,617, பெண்கள் 6,75,139, மூன்றாம் பாலினத்தவா் 138 என மொத்தம் 13,27,894 வாக்காளா்கள் உள்ளனா். மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,317 ஆக உள்ளது. வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி ஆணையா்கள் தட்சிணாமூா்த்தி, சுரேஷ்குமாா், அமிா்தலிங்கம், உதவி ஆணையா் (வருவாய்) ரெங்கராஜன், உதவி செயற்பொறியாளா் சுப்புத்தாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.