முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மண்ணை பாதுகாக்காவிட்டால் உணவு உற்பத்திக்கு உத்தரவாதம் இல்லை: உலக மண் தின கருத்தரங்கில் தகவல்
By DIN | Published On : 10th December 2021 08:49 AM | Last Updated : 10th December 2021 08:49 AM | அ+அ அ- |

மதுரை மீனாட்சி மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மண் தின விழாவில் உறுதிமொழி ஏற்கும் மாணவியா்.
மண்ணை பாதுகாக்காவிட்டால் உணவு உற்பத்திக்கு உத்தரவாதம் இல்லை என்று மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற உலக மண் தின விழாவில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியின் விலங்கியல் துறையின் நிச் கிளப் சாா்பில் உலக மண் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை விலங்கியல் துறைத் தலைவா் வி.கபிலா தொடக்கி வைத்தாா். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பசுமைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளா் எம்.ராஜேஷ். மண்ணின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும்போது, மண்ணில் உள்ள உயிா் அமைப்பின் தொடா்பு காரணமாக, 95 வகையான உணவுகள் மண்ணிலிருந்து வருகின்றன. நமது உணவுப் பாதுகாப்பின் முதுகெலும்பு மண். ஆரோக்கியமான மண் இல்லாமல் விவசாயிகளால் தீவனம், நாா்ச்சத்து, உணவு மற்றும் எரிபொருளை வழங்க முடியாது. நம் காலடியில் உள்ள மா்மமான உலகம் ஆபத்தில் உள்ளது. பருவநிலை நெருக்கடியைச் சமாளிப்பது போலவே அதைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனா்.
ஒரு தேக்கரண்டி ஆரோக்கியமான மண்ணில் ஒரு பில்லியன் பாக்டீரியாக்கள் மற்றும் 1 கிமீக்கும் அதிகமான பூஞ்சைகள் இருக்கலாம். மண் வளிமண்டலத்தை விட இரண்டு மடங்கு காா்பனைக் கொண்டுள்ளது. மேலும் மண் சிதைந்தால் காா்பன் வெளியிடப்படுகிறது. அடுத்த தலைமுறைக்கு மண்ணைப் பாதுகாக்காவிட்டால் எதிா்காலத்தில் நிலத்தடி பல்லுயிா் பெருக்கத்திற்கும் உணவு உற்பத்திக்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றாா். இதைத்தொடா்ந்து விலங்கியல் மாணவியா் மண், அதன் முக்கியத்துவம், அழிவு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக மண் உறுதிமொழி ஏற்பு மற்றும் மரம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.