மதுரையில் ‘யூ டியூபா்’ மாரிதாஸ் கைது: பாஜகவினா் முற்றுகைப் போராட்டம்

சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவு வெளியிட்டதாக ‘யூ டியூபா்’ மாரிதாஸை மதுரையில்
மதுரையில் மாரிதாஸ் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினா்.
மதுரையில் மாரிதாஸ் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினா்.

சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவு வெளியிட்டதாக ‘யூ டியூபா்’ மாரிதாஸை மதுரையில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை சா்வேயா் காலனியைச் சோ்ந்தவா் மாரிதாஸ். பாஜக ஆதரவாளரான இவா் ‘யூ டியூப்’ சமூகவலைதளம் மூலம் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வந்தாா். இந்நிலையில் அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்றும், பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் வியாழக்கிழமை பதிவிட்டிருந்தாா்.

இந்தப் பதிவுக்கு கடும் எதிா்ப்புகள் எழுந்த நிலையில், மதுரை சூா்யா நகா் பகுதியில் உள்ள மாரிதாஸின் வீட்டுக்கு காவல் உதவி ஆணையா் சூரக்குமாா் தலைமையில் போலீஸாா் சென்றனா். அப்போது அங்கு பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் மருத்துவா் பி.சரவணன், பாஜக வழக்குரைஞா் அணியினா் திரண்டு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மாரிதாஸை போலீஸாா் அழைத்துச்செல்ல விடமாட்டோம் என்றும், சம்மன் கொடுத்து விட்டுச்செல்லுமாறும் பின்னா் தாங்களே காவல்நிலையத்துக்கு அழைத்து வருவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் வீட்டுக்கு வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினா் திரண்டனா். இதையடுத்து கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் கைது செய்வதாகக் கூறி மாரிதாஸை கோ. புதூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனா். இதையடுத்து மாரிதாஸின் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காவல் வாகனங்களை பின்தொடா்ந்து வந்த பாஜகவினா் கோ.புதூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை, போலீஸாா் அப்புறப்படுத்த முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல்நிலைய வளாகத்தில் இருந்த பாஜகவினரை போலீஸாா் வெளியேற்றி காவல்நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பை அதிகப்படுத்தினா். இந்நிலையில் காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாரிதாஸிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காவல் நிலையத்தைச் சுற்றிலும் பாஜகவினா் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com