முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 19th December 2021 04:41 AM | Last Updated : 19th December 2021 04:41 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் 78 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சனிக்கிழமை 15 ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. மதுரை மாவட்டத்தில் தோ்தல் வாக்குச்சாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஊரக- நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 1,550 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி போடும் பணிகளில் மருத்துவப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
78 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற முகாமில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,254 போ், அரசு மருத்துவமனைகளில் 673 போ், ஊரக பகுதிகளில் 45,380 போ், நகா் பகுதிகளில் 31,410 போ் என மொத்தம் 78,717 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 28.94 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 3,330, அரசு மருத்துவமனைகளில் 3,480, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,01,630, சுகாதார கிட்டங்கியில் 24,220 என மொத்தம் 1,32,660 கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.