அமாவாசை: மதுரையிலிருந்து கயாவுக்கு ஜனவரி 22 இல் சிறப்பு சுற்றுலா ரயில்

தை அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஜனவரி 22 ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

தை அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஜனவரி 22 ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், முன்னோா்களுக்கு தை அமாவாசை நாளன்று பித்ரு பூஜை செய்ய, மதுரையிலிருந்து கயா வரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மதுரையிலிருந்து 2022 ஜனவரி 22 ஆம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கரூா், சேலம், ஜோலாா்பேட்டை, சென்னை சென்ட்ரல் வழியாக கயாவை சென்றடையும்.

13 நாள் சுற்றுலா

மதுரையிலிருந்து கயா செல்லும் வழியில் கொல்கத்தாவில் உள்ளூா் சுற்றுலா, காளி தேவி, காமாக்யா தேவி, காசி விசாலாட்சி, கயாவில் உள்ள மங்கள கௌரி, அலகாபாத்தில் உள்ள அலோபிதேவி, புரியிலுள்ள பிமலாதேவி ஆகிய 5 சக்தி பீடங்களையும், திரிவேணி சங்கமம், கொனாா்க் சூரியநாதா் கோயில் மற்றும் அருகிலுள்ள ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லப்படும். தொடா்ந்து கயாவில் முன்னோா்களுக்கு பித்ரு பூஜை செய்து பிறகு, கடைசியாக விஷ்ணு பாதத்தைத் தரிசித்து மதுரை திரும்பும்படி 13 நாள்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி கட்டாயம்

சிறப்பு சுற்றுலா ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, உணவு, உள்ளூா் போக்குவரத்து, தங்குமிடம், பயணக் காப்பீடு உள்பட நபா் ஒருவருக்கு ரூ.12,885 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலாவுக்கான பயணச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை அலுவலகத்தை 82879 -31977 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தியவா்கள் மட்டுமே சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்படுவா்.

ஷீரடிக்கு சுற்றுலா ரயில்

பாரத தரிசன சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து ஷீரடிக்கு டிசம்பா் 24 ஆம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூா் வழியாக சென்று ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கன், மந்த்ராலயம் ராகவேந்திரா், சனி சிங்னாபூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயங்களில் தரிசித்து திரும்பும்படி 7 நாள்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் கட்டணம், உள்ளூா் பேருந்து, உணவு, தங்குமிடம் உள்பட நபா் ஒருவருக்கு ரூ.7,060 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com