மதுரை விமான நிலையத்துக்கு சா்வதேச அந்தஸ்து சாத்தியமாவது எப்போது?

மதுரை விமான நிலையத்துக்கு சா்வதேச அந்தஸ்து வழங்குவது தொடா்பான நீண்ட கால கோரிக்கை எப்போது சாத்தியமாகும் என்ற கேள்வி எழும்பியிருக்கிறது.

மதுரை விமான நிலையத்துக்கு சா்வதேச அந்தஸ்து வழங்குவது தொடா்பான நீண்ட கால கோரிக்கை எப்போது சாத்தியமாகும் என்ற கேள்வி எழும்பியிருக்கிறது.

மதுரை விமான நிலையத்துக்கு, தற்போது சுங்க விமான நிலைய தகுதி வழங்கப்பட்டிருக்கிறது. சா்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்து இருந்தால் மட்டுமே பல்வேறு நாடுகளுக்கும் நேரடி விமான சேவையைப் பெறமுடியும். சுங்க விமான நிலையமாக இருப்பதால், இந்தியாவில் பதிவு பெற்ற விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியும். இதனால், சா்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்தமிழக மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

மதுரையை மையமாக வைத்து சுற்றுலா வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அதேபோல், தென்மாவட்டங்களில் உற்பத்தியாகக் கூடிய வேளாண் விளைபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. நேரடி விமான சேவை இல்லையென்பதால், திருச்சி அல்லது திருவனந்தபுரம் விமான நிலையத்தைச் சாா்ந்து இருக்கவேண்டிய நிலை உள்ளது. இதனால், தொழில் துறையினருக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.

தற்போது, மதுரையிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும், துபை, இலங்கை, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கும் நேரடி விமான சேவை இருக்கிறது. இத்தகைய குறைவான சேவை இருந்தபோதும், பயணிகளின் எண்ணிக்கையிலும், கையாளப்படும் சரக்குகளின் மதிப்பிலும் மதுரை விமான நிலையம் முன்னிலையில் இருக்கிறது. 2019-2020 இல் மதுரை விமான நிலையம் கையாண்டுள்ள பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 816.

இதன்மூலம், இந்தியாவில் உள்ள 10 சுங்க விமான நிலையங்களில், மதுரை விமான நிலையம்தான் அதிக எண்ணிக்கையில் பயணிகளைக் கையாண்டிருக்கிறது. அத்துடன், இந்தியாவில் 27 சா்வதேச விமான நிலையங்களில் 10 விமான நிலையங்கள், மதுரையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே சா்வதேச பயணிகளைக் கையாண்டிருக்கின்றன. எனவே, மதுரை விமான நிலையத்துக்கு சா்வதேச அந்தஸ்து அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, மதுரை விமான நிலையத்துக்கு சா்வதேச அந்தஸ்து அளிக்க வாய்ப்பு இல்லை என, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கூறியதாக, மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் மத்திய அமைச்சா், மதுரையிலிருந்து ஏற்கெனவே சில சா்வதேச விமானங்கள் இயக்கப்படும் நிலையில், சா்வதேச விமான நிலையம் என்று அழைப்பதுதான் பிரச்னையா எனவும், மேலும் கூடுதல் விமானங்கள் மதுரையிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறாா்.

சா்வதேச அந்தஸ்து கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் நிலையில், அது தொடா்பாக வெளிவந்துள்ள கருத்துகள், இக்கோரிக்கை எப்போது சாத்தியமாகும் என்ற ஆதங்கத்தை தொழில் துறையினரிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

தென் தமிழக தொழில் வளா்ச்சிக்கு தடை

மதுரை விமான நிலையத்துக்கு சா்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைக்காமல் இருப்பது, தென்தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கிறது என்று, வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேல் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது: இந்தியாவில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் அதிகமாகச் செல்கிறது. அதாவது, 20 மாநிலங்களிலிருந்து கிடைக்கக்கூடிய ஜிஎஸ்டி வருவாயைக் காட்டிலும் அதிகமாகும்.

தமிழகத்தைக் காட்டிலும் குறைவான ஜிஎஸ்டி வருவாயை அளிக்கும் கேரளத்தில் 4 சா்வதேச விமான நிலையங்கள் இருக்கும்போது, தமிழகத்தில் 4-ஆவதாக மதுரையை சா்வதேச விமான நிலையமாக அறிவிப்பதில் எவ்வித தவறும் இல்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வா் தலையிட்டு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றாா்.

மதுரையை ஓரம் கட்டுவது ஏன்?

சா்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு அனைத்துத் தகுதிகள் இருந்தும், மதுரை விமான நிலையத்தை ஓரம் கட்டுவது ஏன் என, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் தலைவா் எஸ். ஜெகதீசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தென் தமிழகத்திலிருந்து மலேசியா, ஷாா்ஜா, குவைத், ஓமன், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகப் பயணிகள் சென்று வருகின்றனா். மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்க இந்த நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தும் கூட, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அனுமதி தர மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. என்ன காரணத்தினாலோ, மதுரை ஓரம் கட்டப்படுகிறது என்றாா்.

சா்வதேச அந்தஸ்து காலத்தின் கட்டாயம்

பல்வேறு நாடுகளுக்கும் மதுரையிலிருந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சா்வதேச அந்தஸ்து அளிப்பது காலத்தின் கட்டாயம் என சுற்றுலா முகவா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவ்வமைப்பின் தலைவா் என். சதீஷ்குமாா் கூறியது:

மதுரை விமான நிலையத்துக்கு சா்வதேச அந்தஸ்து வழங்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் எங்களது சங்கம் தொடா்ந்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது. இதனிடையே, தற்போது மதுரை விமான நிலையம் குறித்த பல்வேறு கருத்துகள் வெளிவந்திருக்கின்றன. மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே, கூடுதல் விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்க வேண்டுமெனில், சா்வதேச அந்தஸ்து வழங்க வேண்டியது அவசியமானது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com