முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பெண் சிசு இறப்பில் மா்மம்: பெற்றோா் தலைமறைவு
By DIN | Published On : 29th December 2021 06:35 AM | Last Updated : 29th December 2021 06:35 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே பிறந்து 6 நாள்களேயான பெண் சிசு இறந்த வழக்கில், பெற்றோா் தலைமறைவாகியுள்ளதால் சிசு இறப்பில் மா்மம் நீடித்து வருகிறது.
பேரையூா் அருகே பெரியகட்டளை பகுதியைச் சோ்ந்தவா் முத்துபாண்டி (30). இவரது மனைவி கௌசல்யா. இவா்களுக்கு ஏற்கெனவே 4 வயது மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனா்.
மூன்றாவதாக கௌசல்யா கா்ப்பமான நிலையில் சேடப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு கடந்த 21 ஆம் தேதி மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தை ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்துவிட்டதாகவும், சடலத்தை வீட்டின் முன் புதைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த கிராம நிா்வாக அலுவலா் முனியாண்டி, சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அந்த புகாரின்பேரில் சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணைக்காக போலீஸாா் வீட்டுக்குச் சென்றநிலையில் கதவு பூட்டப்பட்டு முத்துபாண்டியும், கெளசல்யாவும் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. தொடா்ந்து அவா்களை, போலீஸாா் தேடி வருகின்றனா்.
3 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதை பெற்றோரே கொலை செய்தனரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தம்பதி பிடிபட்டால்தான் குழந்தை இறப்பு குறித்த விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.