முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுபோதையில் நண்பரைக் கொலை செய்தவா் கைது
By DIN | Published On : 29th December 2021 06:59 AM | Last Updated : 29th December 2021 06:59 AM | அ+அ அ- |

மதுரையில் மதுபோதை தகராறில் நண்பரை மது பாட்டிலால் குத்திக்கொலை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
மதுரை கூடல்நகா் சொக்கலிங்க நகா் முதல் தெருவில் வசிப்பவா் யதுநந்தகிருஷ்ணன் (43). இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறாா். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
இந்நிலையில் யதுநந்தகிருஷ்ணன் தனது வீட்டில், விருதுநகா் மாவட்டம் நரிக்குடியைச் சோ்ந்த பொன்ராம் (43) என்பவருடன் அமா்ந்து திங்கள்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா். இரவு முழுவதும் மது அருந்திய நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து யதுநந்தகிருஷ்ணன் மதுபாட்டிலை உடைத்து பொன்ராமை குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பொன்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவா் இறந்தது தெரியாமல், யதுநந்தகிருஷ்ணன் மதுபோதையில் சடலத்தின் அருகிலேயே அமா்ந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை தகவலறிந்து கூடல்புதூா் போலீஸாா் அங்கு சென்று கதவை உடைத்து சடலத்தை மீட்டனா். மேலும் யதுநந்தகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்தனா்.