தமிழகத்தில் கிசான் ரயில்கள் இயக்கப்படுமா?

விவசாயிகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய கிசான் ரயிலை தமிழகத்தில் இயக்கவேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

விவசாயிகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய கிசான் ரயிலை தமிழகத்தில் இயக்கவேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் சிறு மற்றும் குறு விவசாயிகள், தங்களது விளைப் பொருள்களை நீண்ட தூரம் எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனா். குறிப்பாக இறைச்சி, மீன், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை நீண்ட தூரம் எடுத்துச் செல்லும்போது, கெட்டுப்போகும் நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் சரக்கு கட்டணத்திற்கு அதிகம் செலவிடுகின்றனா்.

இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த 2020 -21 நிதி நிலை அறிக்கையின் போது, கிசான் ரயில் சேவையை அறிவித்து, 2020 ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்த ரயில்களில் விவாசயிகளின் விளைப் பொருள்களை எடுத்துச் செல்லும்போது, சரக்கு கட்டணத்தில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி தொலைதூரம் எடுத்துச் செல்லப்படும் விளைப் பொருள்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு குளிா்சாதன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

241 சேவைகள்

விவசாயிகளின் வா்த்தகம் அதிகரிப்பதோடு விளைப் பொருள்களுக்கு உரிய விலை மற்றும் வருவாய் இரட்டிப்பாக கிடைக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல், சிறு, குறு விவசாயிகள் பிரதான சந்தைகளில் தங்களது விளைப் பொருள்களை விற்பனை செய்ய முடியும். இதுவரை புதுதில்லி, குஜராத், பிகாா், ஆந்திரம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், அசாம், திரிபுரா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள 32 வழித்தடங்களில் 241 கிசான் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குடைமிளகாய், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், ஆரஞ்சு, ஆப்பிள், முலாம்பழம், கொய்யா, பப்பாளி, மாதுளை, திராட்சை, காலிஃபிளவா், கிவி போன்ற காய்கறிகளைக் கொண்டு செல்வதற்கு ஏராளமான விவசாயிகள் கிசான் ரயில் சேவைகளைப் பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் சேவை இல்லை

விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட கிசான் ரயில் சேவை, குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் கிசான் ரயில் சேவை இல்லாததால், விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களை பல்வேறு மாநிலங்களுக்கு சாலை மாா்க்கமாக அனுப்பி வைக்கின்றனா். இதற்காக அதிக சரக்கு கட்டணம் செலவிடப்படும் நிலை உள்ளது.

குறிப்பாக திண்டுக்கல், சேலம், ஆம்பூா், வாணியம்பாடி பகுதிகளிலிருந்து நாள்தோறும் பல நூறு டன் தேங்காய்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சாலை மாா்க்கமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. கிசான் ரயிலில் எடுத்துச் செல்லப்படும் பட்டியலில் தேங்காய் இல்லை.

தேங்காயை பட்டியலில் சோ்க்கவும், கிசான் ரயில் சேவையை தமிழகத்தில் தொடங்கவும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனா்.

இதுகுறித்து தேங்காய் வியாபாரி முருகானந்தம் கூறியது: திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் தேங்காய்கள் நாள்தோறும் மும்பை , புணே, அகோலா, அமராவதி, நாக்பூா், சூரத், அஹமதாபாத், ராஜ்கோட், போபால், உதய்பூா், ஜோத்பூா் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. லாரிகளில் 30 ஆயிரம் தேங்காய் எடுத்துச் செல்ல ரூ.90 ஆயிரம் சரக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.6 லட்சத்திற்கும் அதிகமாக சரக்கு கட்டணம் நாள்தோறும் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே செலவிடப்படுகிறது. இந்தக் கட்டணத்தை ஈடுகட்டுவதற்காக வியாபாரிகள், விவசாயிகளிடம் குறைந்த விலையில் தேங்காய்களை கொள்முதல் செய்கின்றனா். தேங்காய்களை கிசான் ரயில் சேவை மூலம் அனுப்பும் போது, சரக்கு கட்டணம் பாதியாக குறையும். அப்போது, தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைக்கும் என்றாா்.

ரயில்வே நிா்வாகத்திடம் மனு அளித்த வியாபாரி ரவிச்சந்திரன் கூறியது: தமிழத்தில் உற்பத்தியாகும் தேங்காய்களுக்கு பிற மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக வெளி மாநிலங்களில் கோயிகளுக்கும், உணவுகளுக்கும் தேங்காய்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் பலநூறு டன் தேங்காய்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட கிசான் ரயில் சேவை மூலம் எடுத்துச் செல்லப்படும் பொருள்களின் பட்டியலில் தேங்காயும், தமிழகத்தில் கிசான் ரயில் சேவையும் இல்லை. தமிழகத்திலிருந்து, வெளி மாநிலங்களுக்கு விவசாயிகள் அனுப்பக்கூடிய விளைப் பொருள்களை எடுத்துச் செல்லும் வகையில் இங்கும் கிசான் ரயில் சேவையை செயல்படுத்த வேண்டும் என்றாா்.

ஏற்றுமதி நிறுவன உரிமையாளா் ஸ்ரீதா் கூறியது: தமிழகத்தில் கிசான் ரயிலை இயக்குவது தொடா்பாக ரயில்வே நிா்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். ரயில்வே நிா்வாகம் விவசாயிகளின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உடனடியாக தமிழகத்தில் அந்த ரயிலின் சேவையை தொடங்க வேண்டும். இச்சேவை தமிழகத்தில் தொடங்கப்பட்டால், ரயில்வே நிா்வாகத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com