முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
அரசு அலுவலா்களுக்கான மாவட்ட பயிற்சி நிலையம் கருமாத்தூரில் தொடக்கம்
By DIN | Published On : 31st December 2021 08:42 AM | Last Updated : 31st December 2021 08:42 AM | அ+அ அ- |

அரசு அலுவலா்களுக்கான மாவட்ட பயிற்சி நிலையம் கருமாத்தூா் அருளானந்தா் கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான அடிப்படைப் பயிற்சிகள் வழங்குவதற்கான பயிற்சி நிலையம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து அம் மையத்திற்கு செல்வதற்குப் பதிலாக, அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா்.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் அரசுத்துறை அலுவலா்களுக்கான அரசு அலுவலா் பயிற்சி நிலையம் (பவானிசாகா் அடிப்படை பயிற்சி 10-ஆவது அணி), கருமாத்தூா்அருளானந்தா் கலை, அறிவியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறை அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்களுக்கு 37 நாள்கள் அடிப்படை பயிற்சிக்கு 384 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மேலும் 469 போ் இப் பயிற்சி பெறுவதற்காக நிலுவையில் உள்ளனா்.
பயிற்சி நிலையத் தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.செந்தில்குமாரி, பயிற்சி நிலைய முதல்வா் அ.சாதனைக்குரல், உசிலம்பட்டி கோட்டாட்சியா் சங்கரலிங்கம், கல்லூரிச் செயலா் கில்பா்ட் கமிலஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.