முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பேரையூா் அருகே ஓடையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை 4 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 31st December 2021 08:40 AM | Last Updated : 31st December 2021 08:40 AM | அ+அ அ- |

பேரையூா் அருகே ஓடையில் தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை 4 மாதங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலையைச் சோ்ந்த அய்யனாா் தாக்கல் செய்த மனு:
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எங்களது ஊரில் சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். கனமழை காலங்களில் இப்பகுதியில் உள்ள வண்ணா ஓடை வாயிலாக, இரு பெரிய கண்மாய்கள் நிரம்புகின்றன. இந்த ஓடை சுமாா் 3 கி.மீ தூரத்திற்கு செல்கிறது.
மழை காலங்களில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியைச் சூழந்துவிடுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பெரியன்குளம் கண்மாய் முதல் கணக்கன்குளம் கண்மாய் வரையிலான பகுதியில் வண்ணா ஓடையின் இருபுறமும் கான்கிரீட் தடுப்புச் சுவா் அமைக்கவும், ஓடையைத் தூா்வாரி ஆழப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை 4 மாதத்தில் முடித்து அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனா்.