பெண் சிசு கொலை: பேரையூர் அருகே பெற்றோர் கைது
By DIN | Published On : 31st December 2021 06:40 PM | Last Updated : 31st December 2021 06:40 PM | அ+அ அ- |

பேரையூர் அருகே பிறந்து ஆறு நாட்களே ஆன சிசு இறந்து புதைக்கப்பட்ட சம்பவத்தில் பெற்றோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பெரியகட்டளையில் பிறந்து ஆறு நாள்களே ஆன பெண் சிசு இறந்த நிலையில் புதைக்கப்பட்ட சம்பவத்தில் சிசுவின் பெற்றோர்கள் முத்துப்பாண்டி, கௌசல்யா இருவரும் தலைமறைவாயினர். இந்நிலையில் புதைக்கப்பட்ட பெண் சிசு தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதில் பெண்சிசு தலையில் பலத்த காயம் இருப்பதாக போலீஸார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முழு பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே சிசு இறப்பு குறித்து தெரியவரும் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த பெற்றோர்களை தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில் பெண் சிசுவின் தாய் கௌசல்யா பேரையூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வியாழக்கிழமை அங்கு சென்ற தனிப்படை போலீஸார் கௌசல்யாவை மீட்டு சேடப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க- ஒருநாள் மழைக்கு மீண்டும் மிதக்கும் சென்னை: எடப்பாடி பழனிசாமி
இதனையடுத்து தனிப்படை போலீஸார் பெண் சிசு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கௌசல்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள தந்தை முத்துப்பாண்டியை தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அதன்பின் தனிப்படை போலீஸார் தம்பதியினரிடம் விசாரணை நடத்தியதில் பெண் சிசுவை கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீஸார் பெற்றோரான முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யாவை கைது செய்தனர்.