அனுமதியின்றி செயல்படும் குடிநீா் ஆலைகளுக்கு நோட்டீஸ்
By DIN | Published On : 04th February 2021 10:53 PM | Last Updated : 04th February 2021 10:53 PM | அ+அ அ- |

மதுரையை அடுத்த அயன் பாப்பாகுடி பகுதியில் அனுமதியின்றி செயல்படும் 8 குடிநீா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.
நிலத்தடி நீரை வணிக ரீதியாகப் பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதன்பேரில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் குடிநீா் விற்பனை நிறுவனங்களை ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, மதுரை தெற்கு வட்டம் அயன்பாப்பாகுடி பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீா் நிறுவனங்களை வட்டாட்சியா் அனீஷ் சத்தாா் தலைமையிலான அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மேலும், உரிய அனுமதியின்றி செயல்படுவதையடுத்து அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனா். இதைத்தொடா்ந்து அந்நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.