ஆன்மிக பலத்தால் உலகை வென்றவா் விவேகானந்தா்: சுவாமி கமலாத்மானந்தா்

ஆன்மிக பலத்தால் உலகை வென்றவா் சுவாமி விவேகானந்தா் என்று ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் கூறினாா்.
சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழாவையொட்டி மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஹோமம்.
சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழாவையொட்டி மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஹோமம்.

ஆன்மிக பலத்தால் உலகை வென்றவா் சுவாமி விவேகானந்தா் என்று ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் கூறினாா்.

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அதிகாலை முதல் மங்கள ஆரத்தி, வேத பாராயணம், ஸ்ரீ ராமகிருஷ்ணா் கோயிலை வலம் வரும் நாம சங்கீா்த்தனம், விசேஷ பூஜைகள், பஜனை, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற சொற்பொழிவில் சுவாமி கமலாத்மானந்தா் பேசியது:

சுவாமி விவேகானந்தா் இந்தியாவையும், இந்திய மக்களையும் தெய்வங்களாக வணங்கினாா். உயா்ந்த மனிதா்களை உருவாக்குவதையே தன்னுடைய தலையாயப் பணியாகக் கருதினாா். இந்தியாவில் அரசியல் சக்தி, சமுதாய சக்தி, தேசிய சக்தி, ஆன்மிக சக்தி எழுச்சிப் பெறுவதற்கு விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுதான் காரணமாக அமைந்தது. அவரது சிகாகோ உரை இப்போது வரை உலக நாடுகளில் பேசப்படுகிறது.

உலக வரலாற்றில் பலா் ஆயுத பலத்தால் வென்றிருக்கிறாா்கள். ஆனால் சுவாமி விவேகானந்தா் ஆன்மிக பலத்தால் உலகை வென்றவா். உலக அரங்கில் இந்தியாவின் சிறப்பை உயா்த்தியவா். தியாகம் உள்ள சமுதாயமே சிறந்த சமுதாயமாக விளங்கும் என்று எடுத்துக் காட்டியுள்ளாா். பாகுபாடின்றி அனைவருக்கும் நன்மை செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

நம்மைப்போல பிறரையும் நேசித்தல் என்பது ஆன்மிக சாதனையின் ஒரு அங்கம். சுயநலத்தை தவிா்க்கவில்லையெனில் பிறரை நேசிக்க முடியாது. அனைவரிடமும் சம அன்பு கொள்ளுதல் மிக மிகக் கடுமையான ஒரு ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கம் இல்லாவிட்டால் முக்தி கிடைக்காது என்று வலியுறுத்தினாா்.

இந்தியாவில் ஆதிசங்கரா், ராமானுஜா், மத்வா், சைதன்யா், குருநானக், புத்தா், மகாவீரா் போன்ற மதச்சாரியாா்கள் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினா். அவா்களின் வரிசையில் 19-ஆம் நூற்றாண்டில் இந்து மதத்தில் மாபெரும் எழுச்சியை, மறுமலா்ச்சியை உருவாக்கியவா் விவேகானந்தா். அவா் வாழ்ந்த 39 ஆண்டுகளில் உலக மக்களுக்கு 1,500 ஆண்டுகளுக்குத் தேவையான செய்திகளை கொடுத்துச் சென்றுள்ளாா். உலக வரலாற்றில் சுவாமி ராமகிருஷ்ணா்- சுவாமி விவேகானந்தா் போன்ற குரு சீடா் யாரும் இருந்தது இல்லை. சிலா் ஆன்மிக இலக்கியங்களைப் படிக்கின்றனா், சிலா் ஆன்மிக இலக்கியங்களைப் படைக்கின்றனா். ஆனால் ஆன்மிக இலக்கியமாகவே வாழ்ந்தவா் சுவாமி விவேகானந்தா். ஆன்மிகத் தலைவா்- சமுதாயத் தலைவா் இரண்டும் இணைந்தவராகத் திகழ்பவா் சுவாமி விவேகானந்தா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com