இந்தியாவில் அதிகரித்து வரும் புற்றுநோய்: மருத்துவா்கள் எச்சரிக்கை
By DIN | Published On : 04th February 2021 10:54 PM | Last Updated : 04th February 2021 10:54 PM | அ+அ அ- |

உலகளவில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ஆவது இடத்தில் இருப்பதாக புற்றுநோய் மருத்துவா்கள் கூறுகின்றனா்.
உலக புற்றுநோய் தினத்தையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
மீனாட்சி மிஷன் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுத் தலைவா் கே.எஸ்.கிருஷ்ணகுமாா்: உலகளவில் ஏற்படும் இறப்புகளில் 6-இல் 1 புற்றுநோயால் ஏற்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 3-ஆவது இடத்தில் இருக்கிறது. உயிரிழப்புக்கான முதன்மையான காரணங்களில் இதய நோய்களுக்கு அடுத்ததாக புற்றுநோய்கள் இருக்கின்றன. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனா். புற்றுநோய் பாதிப்பு அடிப்படையில் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது.
புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு இல்லாததும், அதற்கான பரிசோதனை வசதிகள் இல்லாததும் தான் தாமதமாக நோய் கண்டறியப்படுவதற்கான காரணங்களாக இருக்கின்றன.
முதுநிலை மருத்துவா் கிருஷ்ணகுமாா் ரத்னம்: இந்தியாவில் பெரும்பாலும் மாா்பகம், வாய், நுரையீரல், வயிறு மற்றும் பெருங்குடல் அல்லது மலக்குடல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களில் தான் அதிகம்போ் பாதிக்கப்படுகின்றனா். ஆண்களுக்கு புகையிலைப் பயன்பாடு காரணமாக தலை மற்றும் கழுத்துப் பகுதியில் புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்களுக்கு கா்ப்ப வாய் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது.
புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணா் ஆா்.விஜயபாஸ்கா்: புகையிலைப் பயன்பாடு, உணவுப் பழக்கம், மதுப் பழக்கம், சில வைரஸ்களின் நீண்டகாலத் தொற்று, உடல் பருமன் ஆகியன புற்றுநோய்க்கான காரணங்களாக இருக்கின்றன. முன்கூட்டியே கண்டறிதல், வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தல் போன்றவற்றின் மூலம் நோய் பாதிப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
கதிா்வீச்சு சிகிச்சைப் பிரிவு முதுநிலை மருத்துவா் பி.ஆனந்த செல்வகுமாா்: புற்றுநோய் சிகிச்சையில் அறுவைச் சிகிச்சை, கதிா்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகியன அடங்கியுள்ளன என்றாா்.