கரோனா தடுப்பூசியால் தூய்மைப்பணியாளா் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரம்: விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் மறுபிரேதப்பரிசோதனை செய்ய உத்தரவு
By DIN | Published On : 04th February 2021 11:00 PM | Last Updated : 04th February 2021 11:00 PM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தூய்மைப்பணியாளா் உயிரிழந்தாகக் கூறப்படும் விவகாரத்தில், விதிகளைப் பின்பற்றாமல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் மறுபிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த தற்காலிக தூய்மைப் பணியாளா் மனோகரன்(39). கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இவருக்கு உடல்நலபாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஜனவரி 30 ஆம் தேதி வந்து கொண்டிருந்த அவா், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்தாா்.
இதையடுத்து, கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகே எனது கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை அரசு அதிகாரிகள் மூடி மறைக்க முயற்சிக்கின்றனா். எனவே, அவரது உடலை மீண்டும் சிறப்பு மருத்துவக்குழு அமைத்து பிரேதப்பரிசோதனை செய்து, உயிரிழப்பிற்கான காரணத்தைக் கண்டறியவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனோகரனின் மனைவி அம்பிகா சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், விதிமுறைகளைப் பின்பற்றி மனோகரனின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை. எனவே மறுபிரேதப்பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கணவருடைய உடல் உரிய விதிகளைப் பின்பற்றி பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை என்றால், மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். உரிய விதிகள் பின்பற்றப்பட்டிருந்தால் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (பிப்.5) ஒத்திவைத்தனா்.