மதுரையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 150 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் திருட்டு
By DIN | Published On : 04th February 2021 10:52 PM | Last Updated : 04th February 2021 10:52 PM | அ+அ அ- |

மதுரை பைகாராவில் திருட்டு நடந்த வீட்டில் சிதறிக்கிடக்கும் பொருள்களை வியாழக்கிழமை பாா்வையிடும் காவல் துறையினா்.
மதுரை பைகாரா பகுதியில் வியாழக்கிழமை பூட்டியிருந்த வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து பீரோவில் இருந்த 150 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை பைகாரா இபி காலனி 7 ஆவது தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவா் வாடிப்பட்டியில் உள்ள தனியாா் டிராக்டா் தயாரிக்கும் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், பிஎஸ்சி முடித்துள்ள நித்யா என்ற மகளும், தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ராமு, 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆதித்யா என்ற இரு மகன்களும் உள்ளனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல முருகன் வேலைக்குச் சென்றுவிட்டாா். இரண்ாடவது மகன் ராமு பள்ளிக்குச் சென்று விட்டாா். மூன்றாவது மகன் ஆதித்யா படிக்கும் தனியாா் பள்ளியில் புத்தகங்கள் வாங்குவதற்காக காளீஸ்வரி, நித்யா, ஆதித்யா ஆகியோா் வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனா். அவா்கள் மாலை வீடு திரும்பியபோது பின்பக்கக் கதவுகளும், பீரோ கதவுகளும் உடைக்கப்பட்டு, 150 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கத்தையும் மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காளீஸ்வரி அளித்தப் புகாரின் பேரில், சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியது: வீட்டின் உரிமையாளரிடம் 150 பவுன் நகைகளுக்கான ஆவணங்களை சமா்பிக்குமாறு கேட்டுள்ளோம். வீட்டை பல நாள்கள் நோட்டமிட்டு யாருமில்லாத நேரத்தில் திருடியுள்ளனா். மோப்பநாய் வரவழைத்து நடத்திய ஆய்வில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. வீட்டில் உள்ள ஒரு பீரோவை உடைத்து அதிலிருந்த சாவிகளைக் கொண்டு மற்ற 2 பீரோக்களையும் திறந்து அனைத்துப் பொருள்களையும் கலைத்துப்போட்டுவிட்டு நகை, பணத்தைத் திருடிச் சென்றுள்ளனா். இதனால் கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்துள்ளோம். மேலும் இப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தையும் சேகரித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.