இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 06th February 2021 09:26 PM | Last Updated : 06th February 2021 09:26 PM | அ+அ அ- |

மதுரை: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரும் வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். குறிப்பாக ஆண்டுதோறும் நடக்கும் ஆடித் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வருகின்றனா். இருப்பினும் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை. மேலும் கோயில் வளாகம் சுகாதாரமாக பராமரிக்கப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக கோயில் பாதுகாப்பு அறை திறக்கப்படவில்லை. கோயில் வணிக வளாகம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இக்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா், இந்து சமய அற நிலையத்துறை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 5 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.