தை அமாவாசையை முன்னிட்டு மதுரை- ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக மதுரை-ராமேசுவரம் இடையே இயக்கப்பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு மதுரை-ராமேசுவரம் ரயிலை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்ற மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம், மதுரை- ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில்களை ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி, மதுரை ராமேசுவரம் விரைவு சிறப்பு ரயில் (06097) மதுரையிலிருந்து வியாழக்கிழமை காலை 6.45 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும். மறுமாா்க்கத்தில் ராமேசுவரம் - மதுரை விரைவு சிறப்பு ரயில் (06092) ராமேசுவரத்திலிருந்து வியாழக்கிழமை காலை 10 மணிக்கு புறப்பட்டு பகல் 1.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மற்றொரு ராமேசுவரம் - மதுரை விரைவு சிறப்பு ரயில் (06098) ராமேசுவரத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் கீழ் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.