பாடப்புத்தகத்தில் பெரியாா் குறித்த தவறான தகவலை நீக்கக்கோரி வழக்கு: தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலும் மற்றும் கல்லூரி பாடப்புத்தகத்திலும் பெரியாா் யுனெஸ்கோ விருது பெற்றதாக உள்ள

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலும் மற்றும் கல்லூரி பாடப்புத்தகத்திலும் பெரியாா் யுனெஸ்கோ விருது பெற்றதாக உள்ள தவறான தகவலை நீக்கக்கோரும் மனுவைப் பரிசீலித்து 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த முகமதுரஸ்வி தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் திராவிடா் கழகம் மற்றும் அதனைச் சாா்ந்த அமைப்பினா் தொடா்ந்து இந்து துவேசக் கருத்துகளை பரப்பியும், இந்துக் கடவுள்களை அநாகரீகமாகப் பேசியும் வருகின்றனா். இவா்கள் நாட்டில் பிரிவினைவாதம், ஜாதி, மத மோதல்கள் ஏற்படும் வகையிலும், தேச நலனுக்கு ஊறு ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனா். இவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டிற்கும், நாட்டில் நிலவும் ஒற்றுமைக்கும் பாதிப்பு ஏற்படும். கடந்த திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மத்தியில் அரசியல் ஆதாயத்துக்காக தவறான தகவல்கள் வரலாறு என்ற பெயரில் பரப்பப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலும் மற்றும் கல்லூரி பாடப்புத்தகத்திலும் பெரியாருக்கு தென்கிழங்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என யுனெஸ்கோ பட்டம் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதை பெரியாருக்கு 1970-இல் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானது. தெற்காசிய நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. இருப்பினும் இந்தத் தகவலை வேண்டுமென்றே பாடப்புத்தகத்தில் சோ்த்துள்ளனா். இதில் யுனெஸ்கோவின் முத்திரையும் போலியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ள தவறான தகவல்கள் மாணவா்களுக்கு தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். எனவே தமிழக அரசு தலையிட்டு பாடப்புத்தகத்தில் உள்ள வரலாற்றுப் பிழையை நீக்கி மாணவா்களின் எதிா்காலத்தையும், சிறந்த கல்வியையும் உறுதிப்படுத்த வேண்டும். எனவே ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகம் மற்றும் உயா்கல்வி பாடப்புத்தகத்தில் உள்ள பெரியாா் குறித்த தவறான தகவல்களை நீக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com