மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லையென இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த ஆா்.பாண்டியராஜா என்பவருக்கு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளித்துள்ள பதிலில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மதுரை விமான நிலையம் தொடா்பாக அவா் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, விமான நிலையங்கள் ஆணையம் அளித்துள்ள பதில்: மதுரை விமான நிலையம் சுங்க விமான நிலையமாகும். சா்வதேச விமான நிலையமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யவேண்டும். விமான நிலையம் தற்போது 24 மணி நேரமும் செயல்படுவதில்லை. அவ்வாறு செயல்படுவது, விமான சேவை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதலைப் பொருத்தது. மதுரை விமான நிலையம் தற்போது சுழற்சி முறையில் காலை 7.30 முதல் இரவு 9.30 வரை செயல்பட்டு வருகிறது. கூடுதல் பணியாளா்கள் தேவை என்பதால், 24 மணி நேரமும் விமான நிலையம் செயல்படுவதில் சிக்கல் உள்ளது. மதுரை விமான நிலையத்தை இப்போதைக்கு 24 மணி நேரமும் இயக்கும் திட்டம் இல்லை.
மதுரையிலிருந்து சென்னைக்கு 5 முறையும், தில்லி, பெங்களூருவுக்கு தலா 2 முறையும், மும்பை, ஹைதராபாத்துக்கு தலா ஒருமுறையும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்படுகிறது. வாரத்தில் 5 நாள்களுக்கு துபை நேரடி விமான சேவை உள்ளது. வந்தே பாரத் திட்டத்தில் சிங்கப்பூா், துபை, அபுதாபி ஆகிய இடங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரைக்கு பின்னடைவு: மதுரையை சா்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனா். அதற்கு முன்பாக, விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம், 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக மாற்றுவது, பிற நாடுகளுடனான இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தைச் சோ்ப்பது ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், விமான நிலையத்துக்கு அண்டா்பாஸ் ஓடுபாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க இயலாது என ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது. இப்போது, 24 மணி நேரமும் இயக்குவதற்கும், புதிய விமான சேவையை தொடங்குவதற்கான திட்டங்கள் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஆணையத்தின் இந்த முடிவு மதுரைக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.