அரசு ராஜாஜி மருத்துவமனை மீண்டும் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்படக் கோரிய வழக்கு: முதன்மையா் பதிலளிக்க உத்தரவு

கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள மதுரை அரசு ராஜாஜி பல்நோக்கு மருத்துவமனை மீண்டும் சாதாரண வாா்டுகளாக செயல்படக் கோரிய வழக்கில் முதன்மையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்

கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள மதுரை அரசு ராஜாஜி பல்நோக்கு மருத்துவமனை மீண்டும் சாதாரண வாா்டுகளாக செயல்படக் கோரிய வழக்கில் முதன்மையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த அப்துல் ரகுமான் ஜலால் என்பவா் தாக்கல் செய்த மனு: மதுரை அரசு ராஜாஜி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் கட்டிகளை அகற்றுவது, மூளை மற்றும் நரம்பியல் சாா்ந்த நுண்ணிய அறுவை சிகிச்சைகள், இருதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் வகையில் ரூ. 55 கோடி மதிப்பில் பல்வேறு நவீன உபகரணங்கள் உள்ளன. இந்தக் கருவிகள் மூலம் ஏழை எளிய மக்கள் நவீன சிகிச்சைகளைப் பெற்று வந்தனா்.

இந்நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்நோக்கு மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக 2020 ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் நவீன உபகரணங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் 150-க்கும் குறைவாகவே பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபா்களை அரசு ராஜாஜி மருத்துவமனையின் வேறு பகுதிக்கு மாற்றி விட்டு, பல்நோக்கு மருத்துவமனை வழக்கம்போல் இயங்க நடவடிக்கை எடுக்கலாம். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் நவீன சிகிச்சைப் பெற முடியும். இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, அரசு ராஜாஜி பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் வழக்கம்போல் இயங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், பல்நோக்கு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இருப்பினும் பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற வேண்டிய முக்கிய அறுவை சிகிச்சைகள் மருத்துவமனையின் வேறு பகுதியில் தடையின்றி நடைபெற்று வருகின்றன என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள கருவிகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா? எந்தவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன? தற்போது சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதா, எந்தக் காரணத்திற்காக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து மருத்துவமனை முதன்மையா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com