வனவிலங்குகளுக்கு எதிரான குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் கோரிய வழக்கு: தமிழக வனத்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

வனவிலங்குகள் வேட்டை தொடா்பான வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக வனத்துறைச் செயலா் பதிலளிக்க...

வனவிலங்குகள் வேட்டை தொடா்பான வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக வனத்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள 30.92 சதவீத காடுகளில், 5 தேசிய பூங்காக்கள், 15 வனவிலங்குகள் சரணாலயங்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 4 புலிகள் வசிக்கும் பகுதிகள் உள்ளன. இங்குள்ள விலங்குகளின் தோல், நகம், தந்தம், பல் போன்றவைகளுக்காக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது.

வனவிலங்குகளைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழகத்தில் 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை வனவிலங்குகளின் பாகங்கள் கடத்தப்பட்டதாக 19,942 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

எனவே தேசிய வனவிலங்கு செயல் திட்டம் 2017 - 2035 அமல்படுத்துவதன் மூலம் சட்டவிரோதமாக வனவிலங்குகள் வேட்டை தொடா்பான குறித்த வழக்குகளை விரைவாக விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே தேசிய வனவிலங்கு செயல்திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்தவும், வனவிலங்கு

குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனவிலங்குகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து, தமிழக வனத்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com