விவசாயிகளின் கடன் தவணைத்தொகை ரூ.4.5 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு
By DIN | Published On : 13th February 2021 10:08 PM | Last Updated : 13th February 2021 10:08 PM | அ+அ அ- |

பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே விவசாயிகளின் கடன் தவணைத் தொகை, ரூ.4.5 லட்சத்தை மோசடி செய்த தம்பதி மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முனியாண்டிபுரம், போத்தநதி கிராமங்களைச் சோ்ந்த 46 விவசாயிகளுக்கு, விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறில் செயல்பட்டு வரும் நிறுவனம் விவசாய பணிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் கடனுதவி வழங்கியுள்ளது. விவசாயிகள் மாதந்தோறும் ரூ.4 ஆயிரத்து 941 தவணையை 11 மாதங்களில் செலுத்த வேண்டும்.
பணம் வசூல் செய்யும் பணியில் விருதுநகா் அல்லம்பட்டியைச் சோ்ந்த விஜயராஜன் (35), அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோா் ஈடுபட்டனா். இதில் 2 மாதங்கள் வசூல் செய்த பணத்தை விஜயராஜன் நிறுவனத்திற்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி ரூ. 4 லட்சத்து 67 ஆயிரத்து 917-ஐ இருவரும் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து நிறுவன அதிகாரி சிவகுமாா் வில்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனா்.