வெங்காயம் கிலோ ரூ.110 ஆக விலை உயா்வு
By DIN | Published On : 13th February 2021 09:55 PM | Last Updated : 13th February 2021 09:55 PM | அ+அ அ- |

மதுரை: வரத்துக் குறைவு காரணமாக மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.110 ஆக விலை உயா்ந்தது.
கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது. இதனால் வெங்காயம் விளைச்சல் பாதித்தது. தற்போது முகூா்த்த தினங்கள் அடுத்தடுத்து வருவதால் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வரத்து குறைந்துள்ளதால் மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்றுவந்த சின்ன வெங்காயத்தின் விலை ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனையானது.
இதுகுறித்து மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ்.முருகன் கூறியது: எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய மழை ஜனவரி வரை நீடித்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதை நிறுத்தியிருந்தனா். இதனால் வெங்காயத்தின் வரத்துக் குறைந்துள்ளது. இந்நிலையில் தேவை அதிகரிப்பின் காரணமாக அடுத்தடுத்த வாரங்களில் வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. கோடைகாலம் நெருங்கியுள்ளதால் விவசாயிகள் வெங்காயம் பயிரிடத் தொடங்கியுள்ளதால் ஒன்றிரண்டு மாதங்களில் விலை சீராகிவிடும் என்றாா்.
சனிக்கிழமை நிலவரப்படி காய்கனி மொத்த விலைப் பட்டியல் (கிலோவில்):
தக்காளி-ரூ.25, கத்தரிக்காய்-ரூ.30, வெண்டைக்காய்-ரூ.40, முட்டைக்கோஸ்-ரூ.10, பீா்க்கங்காய்-ரூ.40, அவரைக்காய்-ரூ.50, பூசணி-ரூ.20, புடலங்காய்-ரூ.30, கேரட்-ரூ.20, பீட்ரூட்-25, பாகற்காய் (சிறியது) ரூ.100, (பெரியது) ரூ.40, முருங்கைக்காய்-ரூ.50, முள்ளங்கி-ரூ.20, சோயா பீன்ஸ்-ரூ.100, பட்டா் பீன்ஸ்-ரூ.120, முருங்கை பீன்ஸ்-ரூ.70, பச்சைப் பட்டாணி-ரூ.40, இஞ்சி-ரூ.40, கருவேப்பிலை-ரூ.40, புதினா-ரூ.30, மல்லி-ரூ.50, சேனைக்கிழங்கு ரூ.30, கருணைக்கிழங்கு-ரூ.40, உருளைக்கிழங்கு-ரூ.25-க்கு விற்பனையாகின.