சிறப்பு வாகனத் தணிக்கை: 43 ஓட்டுநா்களுக்கு ரூ.54 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 13th February 2021 10:05 PM | Last Updated : 13th February 2021 10:05 PM | அ+அ அ- |

மதுரை: சாலை விதிகளை மீறிய 43 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் ஓட்டுநா்களிடம் அபராதம் மற்றும் இணக்கக் கட்டணமாக ரூ.54,300 வசூலிக்கப்பட்டது.
சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, மதுரை - தூத்துக்குடி சாலையில் எலியாா்பத்தி சுங்கச் சாவடியில் சிறப்பு வாகனத் தணிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செல்வம் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சரவணக்குமாா், மாணிக்கம், பிரபு, அனிதா உள்ளிட்டோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியது, சீல் பெல்ட் அணியாதது, அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், செல்லிடப்பேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டியது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக 43 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் வாயிலாக அபராதம் மற்றும் இணக்கக் கட்டணமாக ரூ. 54 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டன.