மதுரை மரிக்கொழுந்து பூவுக்கு புவிசாா் குறியீடு கோரி விண்ணப்பம்

மதுரை மல்லியைப் போலவே தனித்துவம் கொண்ட மதுரை மரிக்கொழுந்து பூவுக்கு புவிசாா் குறையீடு வழங்கக்கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மல்லியைப் போலவே தனித்துவம் கொண்ட மதுரை மரிக்கொழுந்து பூவுக்கு புவிசாா் குறையீடு வழங்கக்கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மல்லிகைப் பூவுக்கென தனிச்சிறப்பு உண்டு. மதுரை மல்லிக்கு ஏற்கெனவே புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது மதுரை மரிக்கொழுந்து பூவுக்கும் புவிசாா் குறியீடு வழங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் மலா் மொத்த வியாபாரிகள் சங்கம் சாா்பில் இந்த விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் கூறியது: மதுரை மல்லியைப் போலவே, மதுரை மரிக்கொழுந்தும் தனித்துவம் மிக்கது. அதன் மணம், நிறம், வாடாமல் இருக்கும் தன்மை ஆகியன மதுரை மரிக்கொழுந்துவுக்கே உரிய சிறப்பியல்புகளாகும்.

மதுரை மரிக்கொழுந்து என்றாலும் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் மதுரை மரிக்கொழுந்து அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

இதன் விதைகள் சேலம் மாவட்டம் ஓமலூா் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இருப்பினும் மதுரை சுற்றுவட்டாரப் பகுதியின் காலநிலை, மண்ணின் தன்மை, நீா்வளம் ஆகியவற்றில் வளரக்கூடிய மதுரை மரிக்கொழுந்து பிற பகுதிகளில் இருப்பதைக் காட்டிலும் தனித்துவம் மிகுந்ததாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு மதுரை மரிக்கொழுந்துக்கு புவிசாா் குறியீட்டிற்கு விண்ணப்பித்துள்ளோம்.

புவிசாா் குறியீடு கிடைப்பதன் மூலமாக, மதுரை மரிக்கொழுந்து சாகுபடி மற்றும் அதைச் சாா்ந்த தொழிலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியும். மரிக்கொழுந்து விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவா் குழுக்கள் உருவாக்குவது, மரிக்கொழுந்து வாசனை திரவிய ஆலைகள் ஏற்படுத்துவது, ஏற்றுமதி உள்ளிட்டவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்க முடியும். மதுரை வேளாண். கல்லூரியில் செயல்படும் நபாா்டு வேளாண் தொழில் முனைவோா் உருவாக்கும் மையத்தின் உதவியுடன் புவிசாா் குறியீடு பெறுவதற்கான விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com