கரூா் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம்: தற்போதைய நிலை தொடர உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 18th February 2021 11:20 PM | Last Updated : 18th February 2021 11:20 PM | அ+அ அ- |

கரூா் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெரியசாமி தாக்கல் செய்த மனு: கரூா் நகராட்சி முத்துகுமாரசுவாமி பேருந்து நிலையத்தில் போதிய இடவதியின்றி நெருக்கடி ஏற்பட்டது. இதனால், நகருக்கு வெளியே கருப்பம்பாளையத்தில் வெளியூா் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் 2 ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகக் கட்டடம் அமைக்க ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பேருந்து நிலையம் கட்டுவதால் பொதுமக்களுக்கு பலன் இல்லை. எனவே தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அரசாணை மற்றும் ஒப்பந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.