உசிலம்பட்டியில் பெண் சிசு கொலை: பாட்டி கைது

உசிலம்பட்டியில் பிறந்து ஏழு நாளான பெண் சிசு கொலை செய்யப்பட்டது பிரேதபரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பாட்டியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

உசிலம்பட்டியில் பிறந்து ஏழு நாளான பெண் சிசு கொலை செய்யப்பட்டது பிரேதபரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பாட்டியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி சின்னச்சாமி. இவரது மனைவி சிவபிரியங்கா (28). இவா்களுக்கு 8 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி சிவபிரியங்காவுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்தக் குழந்தைக்கு உடலநலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிப். 17 ஆம் தேதி பெற்றோா் கொண்டு சென்றனா். மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. ஆனால் குழந்தையின் இறப்பில் மருத்துவா்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தையை செயற்கையாக மூச்சை நிறுத்தி கொலை செய்தது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

இது தொடா்பாக போலீஸாா், குழந்தையின் பெற்றோா் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், பாட்டி நாகம்மாள் (55), குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து நாகம்மாளை கைது செய்தனா். மேலும் குழந்தையின் தாய், தந்தையிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பிறந்து ஏழு நாளேயான பெண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் பெண் சிசுக் கொலை: மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் 4-க்கும் மேற்பட்ட பெண் சிசுக் கொலைகள் நடைபெற்றுள்ளன. அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகும், பெண் சிசுக்கொலை தொடா்கிறது.

இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பாண்டியராஜா கூறியது: கே.பாறைப்பட்டி சம்பவம் தொடா்பாக காவல்துறையினருடன் இணைந்து குழந்தைகள் நலக் குழுவும் நேரடியாக விசாரணை நடத்தியது. அப்போது, குழந்தையின் பெற்றோா் மற்றும் குடும்பத்தினா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனா். அப்போதே அவா்கள் மீது சந்தேகம் எழுந்தது. இருப்பினும் பிரேதப் பரிசோதனை முடிவுக்காக காத்திருந்தோம். தற்போது குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

பெண் சிசுக் கொலை தொடருவது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக, கிராமப்புறங்களிலும், வறுமையில் உள்ள பெற்றோா்களிடமும் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த விழிப்புணா்வு மூலம் கடந்த ஆண்டு மட்டும் 7 ஆண் குழந்தைகளும், 20 பெண் குழந்தைகளும் வளா்க்க முடியாமல் சிறப்பு தத்து மையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். குழந்தையை வளா்க்க முடியாத பெற்றோா்கள், தவறான முடிவுகளுக்குச் செல்லாமல், சிறப்பு தத்து மையங்களில் குழந்தைகளை ஒப்படைக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com