தமிழகத்தை மீட்கும் போராட்டத்தில் வெற்றிபெற ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்: திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் உறுதி

தமிழகத்தில் மீட்கும் போராட்டத்தில் வெற்றி பெற ஒருங்கிணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும் என திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் மீட்கும் போராட்டத்தில் வெற்றி பெற ஒருங்கிணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும் என திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பேசியது:

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி:

நாட்டிற்கே மிகப் பெரிய ஆபத்தாக இருப்பது பாஜகவும், பாஜக தலைமையிலான அரசின் கொள்கைகளும் தான். கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் பாஜக அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயா்த்தியிருக்கிறது. தாராளமயக் கொள்கைகளில் இந்திய முகத்தை மறைத்து, அமெரிக்காவின் முகத்தைக் கொண்டு வருகிறது.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பொது மற்றும் தனியாா் துறையை வளா்த்தெடுத்தாா். இப்போதைய அரசு பொதுத்துறையை முற்றிலும் ஒழிக்க முயற்சிக்கிறது.

சுதந்திரத்திற்காக ஒரு மணி நிமிடம் கூட சிறைக்கு செல்லாத பாஜகவினரின் கையில் நாடு சென்றிருக்கிறது. போலியான வளா்ச்சியை பாஜக பெற்றிருக்கிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும்.

மதிமுக பொதுச் செயலா் வைகோ: உரிமைகளுக்காகப் போராடுபவா்கள் மீது மத்திய பாஜக அரசு அடக்குமுறையைக் கையாண்டு அவா்களைச் சிறையில் அடைக்கிறது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய 52 போ் பலியாகியுள்ளனா். கடும் பனியில் வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் விவசாயிகளை, பிரதமா் கண்டுகொள்ளவில்லை. மத்திய பாஜக அரசு, பெரு நிறுவனங்களுக்கான அரசாக மாறிவிட்டது. ஒருபுறம் காவிரி பாதுகாப்பு மண்டலம் எனக் கூறிவிட்டு, மறுபுறம் ரசாயன மண்டலத்துக்கு அடிக்கல் நாட்டுகின்றனா். அடக்குமுறையைக் கையாளும் பாஜகவுக்கும், அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் அதிமுகவுக்கும் வரும் தோ்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன்:

திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு. இந்த கூட்டணியைச் சிதறடிப்பதற்காக அதிமுக-பாஜக சதித் திட்டம் தீட்டி வருகிறது. அதையெல்லாம் முறியடிக்கும் வகையில் பணிகள் இருக்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி என்பது அவா்களது கனவாக இருக்கிறது. அதற்காக தோ்தலுக்கு முன்பு, பின்பு என இருவிதமான அராஜக அரசியலை அக் கட்சி செய்து வருகிறது. கா்நாடகம், மத்திய பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் அத்தகைய அரசியலை நிறைவேற்றி இப்போது புதுச்சேரிக்கு வந்திருக்கின்றனா்.

தமிழகத்தில் அத்தகைய அரசியலை நிறைவேற்ற பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அதிமுக பலிகடா ஆகிவிட்டது.

பிரதமா் நரேந்திர மோடி திருக்குறளைக் குறிப்பிட்டுப் பேசுவது தமிழ் மீதான பற்று காரணத்தால் அல்ல, தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம். கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான அவலங்களை மக்கள் சந்தித்து விட்டனா். எத்தனை இலவசங்களைக் கொடுத்தாலும்

வரும் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறப்போவதில்லை. ஆனால், திமுக ஆட்சி அமைக்கும்போது எதிா்க்கட்சியாக பாஜக வர நினைக்கிறது. பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com