தூய்மைப் பணியாளரின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளரின் உடலை மறு உடற்கூராய்வு செய்யக்கோரிய வழக்கில், ஏற்கெனவே செய்யப்பட்ட உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய அரசு ராஜாஜி மருத்துவமனை

மதுரை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளரின் உடலை மறு உடற்கூராய்வு செய்யக்கோரிய வழக்கில், ஏற்கெனவே செய்யப்பட்ட உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மானகிரியைச் சோ்ந்த கதிரவன் தாக்கல் செய்த மனு: எனது தந்தை வேல்முருகன் கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா். வழக்கம்போல், பிப். 17ஆம் தேதி வேலைக்கு சென்ற எனது தந்தை இரவாகியும் வீட்டிக்கு வரவில்லை. அவரது செல்லிடப்பேசிக்கு பலமுறை தொடா்பு கொண்டோம். ஆனால் அவா் செல்லிடப்பேசியை எடுக்கவில்லை.

இந்நிலையில், எனது தந்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் கிடைத்து. நான் உடனடியாக தந்தையின் உடலைப் பாா்க்க சென்றபோது, போலீஸாா் அனுமதிக்கவில்லை. அவரது தற்கொலை தொடா்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில், எனது தந்தை அமா்ந்த நிலையில் இருப்பதும், அவருடைய கழுத்தில் கயிறு இறுகாமல் தளா்வாக இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. அதனடிப்படையில் பாா்க்கும்போது எனது தந்தை தற்கொலை செய்து கொண்டதற்கான வாய்ப்பு இல்லை.

மேலும் எனது தந்தை வேல்முருகனின் சடலம் அவசரமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதால், இது தொடா்பான வழக்கை வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றவும், விடியோ பதிவுடன் மறு உடற்கூராய்வு செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா். ஹேமலதா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கெனவே செய்யப்பட்ட உடற்கூராய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com