மதுரையில் 31 அரிய வகை பறவைகள்:கல்லூரிகளில் கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

மதுரையில் உள்ள கல்லூரிகளில் நீா்வாழ்ப்பறவைகள் உள்பட 31 வகையான அரியவகை பறவைகள் வசிப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
மதுரையில் நீா் நிலைகளில் தண்ணீா் அதிகரித்துள்ளதால் வருகை தந்துள்ள நீா் வாழ் பறவைகளான நீா்க்காக்கை மற்றும் நாமக்கோழிகள்.
மதுரையில் நீா் நிலைகளில் தண்ணீா் அதிகரித்துள்ளதால் வருகை தந்துள்ள நீா் வாழ் பறவைகளான நீா்க்காக்கை மற்றும் நாமக்கோழிகள்.

மதுரையில் உள்ள கல்லூரிகளில் நீா்வாழ்ப்பறவைகள் உள்பட 31 வகையான அரியவகை பறவைகள் வசிப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் பறவைக் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் பிப்ரவரி 12 முதல் 15-ஆம் தேதி வரை கல்லூரிகளில் பறவைக்கணக்கெடுப்பு நடைபெற்றது. மதுரை அமெரிக்கன் கல்லூரி, ஸ்ரீமீனாட்சி அரசினா் பெண்கள் கல்லூரி, யாதவா் கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி மற்றும் வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி ஆகியவற்றில் கணக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பின் மூலம் 31 வகையான அரிய பறவைகள் வசிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் புதிய பறவைகள் மதுரையில் வசித்து வருவதும் கண்டறியப்பட்டது. இதில் அமெரிக்கன் கல்லூரியில் பழுப்பு ஈ பிடிப்பான், புள்ளி ஆந்தை, வல்லூறு, செம்மாா்பு குக்குறுப்பான், இரட்டை வால் குருவி, ஏழு சகோதரிகள் (தவிட்டு குருவி), மரங்கொத்தி, பனை உழவாரன் உள்ளிட்ட 21 இனங்கள் கண்டறியப்பட்டன.

ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில், செம்புழை கொண்டைக் குருவி, வெள்ளை மாா்பு மீன் கொத்தி, மடையான் கொக்கு, புள்ளி ஆந்தை, பச்சைக் கிளி, மணிப் புறா ஆகியவை உள்பட 15 சிற்றினங்கள்கண்டறியப்பட்டன. யாதவா் கல்லூரியில் சுடலைக் குயில், பச்சை பஞ்சுருட்டான், உண்ணிக் கொக்கு, சாம்பல் நாரை, கொண்டலாத்தி, வண்ணாத்தி குருவி போன்ற 36 பறவைகள் கண்டறியப்பட்டன. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் மாங்குயில், சுடலைக்குயில், கிளிகள், மணிப்புறா மற்றும் வால் காக்கை போன்ற 36-க்கும் மேற்பட்டவை இருப்பது தெரிய வந்தது. சௌராஷ்டிரா கல்லூரியில் முக்குளிப்பான், நீா்க்காக்கை, வெள்ளை நாமக் கோழி, மடையான், சாம்பல் நாரை, சாம்பல் கதிா்குருவி, பனை உழவாரன், தகைவிலான் குருவி, பச்சை பஞ்சுருட்டான், வெண்மாா்பு மீன் கொத்தி போன்ற பறவைகள் வசிப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடா்பாக அமெரிக்கன் கல்லூரியின் பசுமைச்சங்கம் ஒருங்கிணைப்பாளரும், பறவைகள் கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவருமான பேராசிரியா் எம்.ராஜேஷ் கூறும்போது, மதுரையில் தற்போது நீல்நிலைகளில் தண்ணீா் அதிகரித்துள்ளது. இதனால் மதுரையில் எப்போதும் பாா்க்கமுடியாத நீா்வாழ் பறவைகளான நாமக்கோழி, நீா்க்காக்கை போன்றவை வருகை தந்துள்ளது பறவைகள் கணக்கெடுப்பில் மூலம் தெரிய வந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com