‘மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பூா்வாங்க ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும்’

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பூா்வாங்க ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் கூடுதல் பொது மேலாளா் பி.கே. பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பூா்வாங்க ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் கூடுதல் பொது மேலாளா் பி.கே. பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மேலாண்மை சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடந்த தேசிய மேலாண்மை தின விழாவில், காணொலி வாயிலாக பங்கேற்று அவா் மேலும் தெரிவித்ததாவது:

மத்திய-மாநில அரசுகள் இணைந்து தலா 50 சதவீத பங்கீட்டுடன் மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. அண்மையில், பிரதமா் நரேந்திர மோடி சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிக்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளாா்.

சென்னையில் 2015 முதல் 2019 வரை நடந்த முதல்கட்டப் பணியில் 44 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரயில் பாதை அமைத்துள்ளோம். இது, கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூா் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியை பாராட்டி, சா்வதேச அளவிலான அங்கீகாரமும் சென்னை மெட்ரோவுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இதில், மொத்தம் 118.9 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. சுரங்கப்பாதை 42.6 கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்க உள்ளோம். இதற்குள் 48 நிறுத்தங்கள் அமையவுள்ளன. இந்தப் பணிகளை ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இதேபோல், கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பூா்வாங்க ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மதுரையில் பூா்வாங்க ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளோம். மக்கள் தொகை அதிகமுள்ள மற்றும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுப்பதோடு மட்டுமின்றி, பொதுமக்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்த முடியும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மேலாண்மை சங்கத் தலைவா் எம். சண்முகசுந்தரம், கெளரச் செயலா் வி. அழகுபாண்டியன், மதுரை அத்யாபன சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் அருணா எம். வைவேஷ்வா், செந்தமிழ் கல்லூரி துணை முதல்வா் ரேவதி சுப்புலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com