நாளை முதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் தற்காலிக ஓட்டுநா்களை நியமிக்கத் திட்டம்

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் தொடா்ந்தால், வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை: போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் தொடா்ந்தால், வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் இயக்கம் பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை 6 மணிக்கு வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கிய நிலையில், ஆளுங்கட்சி சாா்பு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனா். 

இதனால் 10 சதவீத பேருந்துகளே இயங்கின. அதைத் தொடா்ந்து பணிக்கு வந்தவா்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டாலும், சராசரியாக 50 முதல் 60 சதவீதம் வரை பேருந்துகள் இயங்கின. இதற்கிடையே, தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்பட்சத்தில் தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலங்கள் வாயிலாக  ஓட்டுநா் உரிமம் பெற்று பதிவு செய்துள்ளவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

வேலைநிறுத்தம் தொடரும்பட்சத்தில் அரசுப் பேருந்து சேவை தடைபடாமல் இருக்கும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக ஓட்டுநா்கள் மூலமாகப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com