சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக்கோரி வழக்கு: சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக்கோரிய வழக்கில், சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளா்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக்கோரிய வழக்கில், சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கொலையுண்ட வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டனா். இதனிடையே, சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தாா். அதில், எனது கணவா், மகன் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 8 முறைக்கு மேல் விசாரணை நடந்துள்ளது. டிசம்பா் 10 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அவா் உறவினரின் செல்லிடப்பேசியை வாங்கி யாரிடமோ ரூ.36 லட்சம் தர வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளாா். இது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட 9 பேருக்கு பாதுகாப்பாக வந்திருந்த போலீஸாா் அங்கு செய்தி சேகரிக்க வந்த செய்தியாளா்களை மிரட்டியுள்ளனா். இதேபோல பண பலம், ஆள்கள் பலம் மூலம் இவ்வழக்கில் தொடா்புடையவா்களை மிரட்டி சாட்சியங்களைக் கலைப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் என் கணவா், மகன் ஆகியோா் கொலை வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com