இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 27th February 2021 12:07 AM | Last Updated : 27th February 2021 12:07 AM | அ+அ அ- |

மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்திழுத்தனா்.
இக்கோயில் மாசித்திருவிழா பிப். 18-ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மேலும் சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை மற்றும் ஞானசம்பந்தருக்கு பாலூட்டிய லீலையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும் இரவில் சுவாமி, அம்மன் திருக்கல்யாண கோலத்தில் நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இதையடுத்து திருக்கல்யாணத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி அதிகாலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதைத்தொடா்ந்து தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.