தூத்துக்குடியில் காற்றாலைகள் அமைப்பதை முறைப்படுத்தக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த குமாா் தாக்கல் செய்த மனு:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளுக்கு உரிய அனுமதி பெறப்படுகிா எனக் கேட்டிருந்தேன். அதில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளுக்கு முறையாக அனுமதிப் பெறப்படவில்லை என்பது தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1500 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல காற்றாலைகள் முறையாக அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் விளைநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அருகில் 10 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு காற்றாலைகள் அமைக்கக் கூடாது என விதி உள்ளது. ஆனால் அப்பகுதியிலும் விதிமீறி காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தூத்துக்குடியில் காற்றாலைகள் அமைப்பதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.