கன்னியாகுமரியில் சந்தை நடக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு: வருவாய்த் துறையினா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
By DIN | Published On : 07th January 2021 11:37 PM | Last Updated : 07th January 2021 11:37 PM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் தினசரி சந்தை நடக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறையினா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பிராங்க்ளின் தாக்கல் செய்த மனு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரத்திலிருந்து பிளவக்கல்விளை செல்லும் சாலையை ஒட்டிய பகுதியில் 60 ஆண்டுகளாக தினசரி சந்தை நடந்து வருகிறது. இந்நிலையில் வருவாய்த் துறைக்கு சொந்தமான இந்த இடத்தை சில தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இதனால் வியாபாரிகள் சாலையோரத்தில் கடைகளை நடத்தி வருகின்றனா். இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அழகியபாண்டியபுரத்தில் தினசரி சந்தை நடத்தும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறையினா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.