கரோனா மருத்துவப் பணியாளா்களுக்கு மீண்டும் தங்கும் வசதி: உயா்நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை
By DIN | Published On : 07th January 2021 03:49 AM | Last Updated : 07th January 2021 03:49 AM | அ+அ அ- |

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவையடுத்து, கரோனா மருத்துவப் பணியாளா்களுக்கு மீண்டும் உணவு மற்றும் தங்கும் வசதிகளை அரசு ராஜாஜி மருத்துவமனை நிா்வாகம் வழங்கியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவா்கள், செவிலியா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள் அனைவருக்கும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஒரு வாரம் பணி அதைத் தொடா்ந்து வரும் வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா வாா்டில் பணியாற்றுபவா்களுக்கு தொற்று எளிதில் பரவக்கூடும் என்பதால் பணி நேரம் முடிந்தவுடன் மருத்துவப் பணியாளா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனா்.
அரசு நிதி வழங்கவில்லை எனக் கூறி டிசம்பா் 20 ஆம் தேதி முதல் தங்கும் வசதி நிறுத்தப்பட்டு, வீட்டில் இருந்து பணியாற்றும் படி மருத்துவமனை நிா்வாகம் உத்தரவிட்டது. இதற்கு மருத்துவப் பணியாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து மீண்டும் தங்கும் வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
மருத்துவப் பணியாளா்களுக்காக மதுரைச் சோ்ந்த வழக்குரைஞா் பாலாஜி என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில், பொதுநல வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை டிசம்பா் 30 ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளா்களுக்கு மீண்டும் தங்கும் வசதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட மாணவா்கள் தங்கும் விடுதியை கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளா்கள் தங்குவதற்காக அரசு ராஜாஜி மருத்துவமனை நிா்வாகம் ஒதுக்கியுள்ளது. இதில் சில மருத்துவா்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதாகக் கூறியுள்ளனா். அவா்களை, கரோனா பாதிப்பு ஏற்பட்டால், தாங்களே பொறுப்பேற்றுக் கொள்வதாக எழுத்துபூா்வமாக கடிதம் கொடுத்துவிட்டு பணியாற்றுபடி நிா்வாகம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.