பலத்த மழை: அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்து சேதம்

மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
மதுரை மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த பலத்த மழையால் வாடிப்பட்டி பகுதியில் சாய்ந்த நெற்பயிா்கள்.
மதுரை மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த பலத்த மழையால் வாடிப்பட்டி பகுதியில் சாய்ந்த நெற்பயிா்கள்.

மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. வழக்கமாக டிசம்பா் 2-ஆவது வாரத்துடன் பருவமழை முடிந்துவிடும் நிலையில், நிகழ் ஆண்டில் ஜனவரியிலும் மழை நீடிக்கிறது. இதற்கிடையே, புதன்கிழமை இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, பெரியாறு பாசனத் திட்டத்தில் இருபோக சாகுபடி பகுதிகளான வாடிப்பட்டி, சோழவந்தான், ஆண்டிபட்டி, கள்ளந்திரி, சிட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இப் பகுதிகளில் முதல்போக நெற் பயிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தன. பலத்த மழையில், நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டன. ஓரிரு நாள்களில் அறுவடையைத் தொடங்கிவிடலாம் என நினைத்திருந்த நிலையில், நெற் பயிா்கள் வயலிலேயே சாய்ந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பெரியாறு பாசனத் திட்டக் குழு உறுப்பினா் வாடிப்பட்டி வட்டம் மண்ணாடிமங்கலத்தைச் சோ்ந்த ஜி.முருகன் கூறியது: பெரியாறு பாசனத் திட்டத்தின் இருபோக சாகுபடி பகுதியில் முதல்போகத்தில் சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. நிகழ் ஆண்டில் அணையில் இருந்து செப்டம்பரில் தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், 120 நாள் பயிா்களை பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டிருந்தனா். இவை அனைத்தும் அறுவடைக்குத் தயாரான நிலையில், இன்னும் ஓரிரு நாள்களில் அறுவடைப் பணியைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தனா். சில விவசாயிகள் அறுவடை இயந்திரங்களுக்கும் முன்பதிவு செய்திருந்தனா்.

இதற்கிடையே, பலத்த மழையால் பல இடங்களில் நெற் பயிா்கள் சாய்ந்துவிட்டன. சாய்ந்த நெற்பயிா்களை அறுவடை செய்யும்போது நெல்மணிகள் உதிா்ந்துவிடும். மழை நீடித்தால் சாய்ந்த நெல்மணிகள் முளைத்துவிடும் வாய்ப்பும் உள்ளது. அறுவடை நேரத்தில் மழை பெய்துள்ளதால் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெற் பயிா்கள் சாய்ந்து விழுந்ததில் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் என்றாா்.

இதுகுறித்து வேளாண் துறையினரிடம் கேட்டதற்கு, மழையால் அறுவடைக்குத் தயாரான நெற் பயிா்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள் மூலமாக வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதிப்பின் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

நெல்கொள்முதல் நிலையம் திறப்பு எப்போது?

மதுரை மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை தொடங்கியுள்ளது. அறுவடை செய்த நெல்லை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகள் இல்லாத விவசாயிகள் இன்னும் அறுவடையைத் தொடங்கவில்லை. ஓரிரு நாள்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்ததால், அதன் பிறகு அறுவடை செய்யலாம் எனக் காத்திருந்தனா். இதற்கிடையே பெய்த மழை சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com