மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை
By DIN | Published On : 07th January 2021 11:40 PM | Last Updated : 07th January 2021 11:40 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை (ஜன.8) நடைபெறுகிறது.
கரோனா தீநுண்மி தொற்று பரவத் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அதற்கு எதிரான போராட்டத்தின் அடுத்தகட்டமாக தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு ஆயத்தமாகும் வகையில், மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் கே.வீ.அா்ஜூன் குமாா் கூறியது: கரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு செலுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய அளவில் இதற்கான ஒத்திகை ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடந்து முடிந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, மேலூா் அரசு மருத்துவமனை, கோவில்பாப்பாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோ.புதூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு தனியாா் மருத்துவமனை என 5 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெறும்.
எந்தவொரு தவறும் ஏற்படாமல் கரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வதற்காக இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்தப்படும் இடத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் வகையில் காத்திருப்போா் அறை, தடுப்பூசி செலுத்தப்படும் அறை, தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு பயனாளிகளை 30 நிமிடங்கள் கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு அறை, அவசர கால மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபா்களின் விவரங்கள் ஏற்கெனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் அடையாளங்களைச் சரிபாா்த்தல், ஆவணங்கள் சமா்ப்பித்தல், தடுப்பூசி செலுத்துதல், கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பாளா் என ஒவ்வொரு தடுப்பூசி மையத்துக்கும் 5 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களிலும் தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் அடையாளங்கள் சரிபாா்க்கப்பட்டு அவா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெறும் என்றாா்.