ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனுக்கு பரோல் கோரி மனு: தமிழக உள்துறைச் செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 07th January 2021 03:42 AM | Last Updated : 07th January 2021 03:42 AM | அ+அ அ- |

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டையைச் சோ்ந்த ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு: எனது மகன் ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்தியச் சிறையில் 28 ஆண்டுகளாக உள்ளாா். இவ்வழக்கில் ரவிச்சந்திரன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீா்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் ஆளுநா் ஒப்புதல் வழங்கவில்லை. கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்தபோது ரவிச்சந்திரனுக்கு 3 மாதங்கள் பரோல் கோரி சிறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். மத்திய சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் தண்டிக்கப்பட்டுள்ளதால் பரோல் வழங்க முடியாது எனக் கூறி மனு நிராகரிக்கப்பட்டது. இதே காரணத்துக்காக ஏற்கெனவே ஒரு முறை பரோல் மறுக்கப்பட்டபோது, அதை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ரவிச்சந்திரனுக்கு 2 மாதங்கள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலா், சிறைத்துறைத் தலைவா், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.