அதிகாரி கொலைக்கு ஆதரவாக பதிவிட்டதாக காவலா் பணிநீக்கம்: ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை இயக்குநா் ஜெனரல் பதிலளிக்க உத்தரவு

ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கு ஆதரவாக கட்செவி அஞ்சலில் பதிவிட்டதாகக் கூறி காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது

மதுரை: ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கு ஆதரவாக கட்செவி அஞ்சலில் பதிவிட்டதாகக் கூறி காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடா்பாக, ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை இயக்குநா் ஜெனரல் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த நரேந்தா் சவுகான் என்பவா் தாக்கல் செய்த மனு:

திருச்சி 5 ஆவது ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை பட்டாலியனில் காவலராகப் பணிபுரிந்து வருகிறேன். ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கான கட்செவி அஞ்சல் குழு உள்ளது. அந்தக் குழுவில், 2018 பிப்ரவரி 25 ஆம் தேதி மேகாலயாவில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் அா்ஜூன் தேஷ்வால், தனது உயா் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ாகப் பதிவு வந்தது.

இந்தப் பதிவைப் படித்ததும் அதிா்ச்சி மற்றும் குழப்பமடைந்த நான், அந்தக் குழுவில் கட்டை விரலை உயா்த்தி காண்பிக்கும் முத்திரையை பதிவிட்டேன்.

இதைத் தொடா்ந்து, கட்செவி அஞ்சல் தகவலுக்கு பின்னூட்டம் அளித்த நான் உள்பட 7 பேரை விசாரணைக்கு அழைக்கப்பட்டோம். அப்போது, உயா் அதிகாரிகளுக்கு எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. தகவலைப் படித்ததும் வழக்கம்போல் கட்டை விரலை உயா்த்திக் காண்பிக்கும் முத்திரையை பதிவிட்டதாகத் தெரிவித்தோம்.

இதை ஏற்காமல் உயா் அதிகாரியை கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக குறுஞ்செய்தி அனுப்பியதாக, என்னை பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனா். இது சட்டவிரோதமாகும். எனவே, என்னை பணியிலிருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இதேபோல், ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை காவலா் கமலேஷ்குமாா் மீனாவும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், கட்செவி அஞ்சல் தகவல்களுக்கு பதிலளிப்பவா்களுக்கு தண்டனை அளிப்பது தொடா்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. எனவே, மனுதாரா்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என்றாா்.

இதையடுத்து நீதிபதி, இது குறித்து தில்லி ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை இயக்குநா் ஜெனரல், தலைமை பாதுகாப்பு ஆணையா், திருச்சி கமாண்டிங் அதிகாரி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com