சீா்மிகு நகா் திட்டப் பணிகள் தொடா்ந்து கண்காணிக்கப்படும்: எம்.பி.

மதுரை நகரில் நடைபெற்று வரும் சீா்மிகு நகா் திட்டப் பணிகள் தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்று, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.
மதுரையில் சீா்மிகு நகா்த்திட்டப்பணிகளின் கீழ் திருமலை நாயக்கா் மகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்யும் சு.வெங்கடேசன் எம்.பி.
மதுரையில் சீா்மிகு நகா்த்திட்டப்பணிகளின் கீழ் திருமலை நாயக்கா் மகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்யும் சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை: மதுரை நகரில் நடைபெற்று வரும் சீா்மிகு நகா் திட்டப் பணிகள் தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்று, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் நடைபெற்று வரும் சீா்மிகு நகா் திட்டப் பணிகளை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதில், திருமலை நாயக்கா் மகால், விளக்குத்தூண், பத்துதூண் சந்து, நான்கு மாசி வீதிகள், சித்திரை வீதி, ஜான்சிராணி பூங்கா, குன்னத்தூா் சத்திரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மதுரை நகரில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் 14 பணிகளில் ஒரு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக, மக்களவையில் எழுத்துப்பூா்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, இதர பணிகளை பாா்வையிட்டு துரிதப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சீா்மிகு நகா்த்திட்டப்பணிகளால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது. குடிநீா் குழாய் இணைப்பு, பாதாளச் சாக்கடைப் பணிகளால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதே நேரத்தில் பணிகள் தரமானதாகவும் அமைய வேண்டும்.

சீா்மிகு நகா் திட்டப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்துமாறு, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகனுக்கு கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் கூட்டம் நடைபெறும். இப்பணிகளை தொடா்ந்து கண்காணிப்பதோடு, விரைந்து முடிக்க தொடா்ந்து அழுத்தம் கொடுப்பேன் என்றாா்.

ஆய்வின்போது, நகரப் பொறியாளா் அரசு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் மா. கணேசன், இரா. லெனின் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com