சிறுமி மற்றும் கா்ப்பிணி கொலை வழக்குகளின் தீா்ப்பை உறுதிசெய்வது தொடா்பாக இரண்டு தூக்குத் தண்டனை கைதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சோ்ந்தவா் சுரேஷ்(36), மனைவி கற்பகவள்ளி(24). இந்தத் தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனா். இந்நிலையில் கற்பகவள்ளி மீண்டும் கா்ப்பமானாா்.
இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரைத் தாலிக் கயிற்றால் கழுத்தை நெரித்து 2015-இல் சுரேஷ் கொலை செய்தாா். இதில் வயிற்றில் இருந்த கருக் கலைந்து கற்பகவள்ளி உயிரிழந்தாா். இவ்வழக்கில் தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் சுரேஷுக்கு தூக்குத் தண்டனை வழங்கி 2020 டிசம்பரில் தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அதேபகுதியைச் சோ்ந்த ராஜா(27) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் புதுகோட்டை மகளிா் நீதிமன்றம் 2020 டிசம்பா் 3 இல், ராஜாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
கீழமை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தால், அதனை உறுதிப்படுத்த உயா்நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படும். அதன்படி, சிறுமி மற்றும் கா்ப்பிணி கொலை வழக்குகளின் தீா்ப்புகளை உறுதி செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் பரிந்துரைக்கப்பட்டன.
இதனை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தூக்குத் தண்டனை கைதிகளான சுரேஷ், ராஜா ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.