ஜல்லிக்கட்டுப் போட்டி வா்த்தக விளையாட்டாகிறதா? தரம் குறைந்த பரிசுப் பொருள்களால் ஏமாற்றப்படும் மாடுபிடி வீரா்கள்

தமிழா்களின் பாரம்பரியத்தைக் காப்பதற்காக மீட்டெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், உயிரை பணயம் வைத்து மாடுபிடிக்கும் வீரா்களை ஏமாற்றும் வகையில் தரம் குறைந்த பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

தமிழா்களின் பாரம்பரியத்தைக் காப்பதற்காக மீட்டெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், உயிரை பணயம் வைத்து மாடுபிடிக்கும் வீரா்களை ஏமாற்றும் வகையில் தரம் குறைந்த பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, சில சுயநலவாதிகள் ஜல்லிக்கட்டை பணம் சம்பாதிக்கும் வா்த்தக விளையாட்டாக மாற்றி வருகின்றனா். இவற்றை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் பாா்வையை ஈா்க்கும் வகையில் ஒட்டுமொத்த தமிழகமே திரண்டு போராடியதன் காரணமாக, ஜல்லிக்கட்டுப் போட்டி மீட்டெடுக்கப்பட்டது. காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுதான், ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கியக் காரணமாக இருந்தது. இப்போது அதீத கவனத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதுஒருபுறம் இருந்தாலும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகள் பதிவு, தனியாா் நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருள்கள் பெறுவது, அவற்றை காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு வழங்குவது ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லையென்ற குற்றச்சாட்டு தற்போது அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு, வீரா்களுக்கு வழங்கப்பட்ட தங்கக்காசு தரம் குறைந்தது என்றும், முதல் பரிசு பெற்ற மாடுபிடி வீரா் தோ்வில் முறைகேடு நடந்துள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நிகழ் ஆண்டில் 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், போட்டியில் மொத்தம் 719 காளைகள் மட்டுமே அவிழ்த்துவிடப்பட்ன. ஏராளமான காளைகள், அவிழ்த்து விடாமலேயே திருப்பி அழைத்துச் செல்லப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு காளைகளை அழைத்து வருவதற்கான போக்குவரத்துக்கு மட்டும், ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் எத்தனை காளைகள் அவிழ்க்க முடியும் என்ற கணக்கீடு செய்ய முடியும் என்றாலும், அளவுக்கதிமாக அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால், காளை உரிமையாளா்கள் பலரும் ஏமாற்றமடைகின்றனா். காளைகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்குவதிலும், வாடிவாசல் வழியாக அவிழ்ப்பதில் முன்னுரிமை கொடுப்பதிலும் ஜல்லிக்கட்டுக் குழு, காவல் துறையினா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகா்களின் தலையீடு இருப்பதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

தரமற்ற பரிசுப் பொருள்கள்: ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் பல்வேறு தனியாா் நிறுவனங்களை அணுகி போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீரா்களுக்கும் வழங்குவதற்காக பரிசுப் பொருள்களாகவும், ரொக்கமாகவும் நன்கொடைகள் பெறுகின்றனா். இவற்றில் தங்கக் காசுகள், பித்தளை மற்றும் எவா்சில்வா் பாத்திரங்கள், பிளாஸ்டிக் நாற்காலி, வயா் கட்டில் உள்ளிட்ட பொருள்கள் அதிகம். ‘ஸ்பான்சா்’ வழங்கும் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான பொருள்களை வழங்க ஆா்வம் செலுத்தும் அளவுக்கு அவற்றின் தரத்தில் அக்கறை செலுத்துவதில்லை என்று ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். ஆனால், இதை ஜல்லிக்கட்டு குழுவினா் மறுக்கின்றனா்.

பிடிபடாத ஒவ்வொரு காளை மற்றும் காளையை அடக்கும் மாடுபிடி வீரருக்கு ஒவ்வொரு முறையும் குறைந்தது 10 பொருள்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. பரிசுப் பொருள்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.2 ஆயிரம் மதிப்புக்கு மேலே இருக்குமாறு பாா்த்துக் கொள்கிறோம். குறைவாக இருக்கும்பட்சத்தில் கூடுதலாகப் பொருள்களை வழங்குகிறோம். தரம் குறைந்த பொருள்களை எந்த நிறுவனமும் வழங்குவதில்லை என்கின்றனா்.

தொடரும் சா்ச்சை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் காா், மோட்டாா் சைக்கிள் போன்ற பெரும் பரிசுகள் அறிவிக்கப்பட்ட பிறகே பல்வேறு சா்ச்சைகள் தொடா்ந்து கொண்டிருக்கின்றன என்கிறாா் பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிக காளைகளை அடக்கியுள்ள மாடுபிடி வீரா் மணிகண்டன்.

இதுகுறித்து மேலும் அவா் கூறியது: அதிக காளைகளை அடக்கியவா் என்ற கணக்கெடுப்பு ஆரம்பித்த பிறகே, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இதற்கு முன்பு வரை காளையை அடக்கும் வீரருக்கு சாதாரண பரிசுகள் வழங்கப்படும். அவற்றை பெருமையுடன் வாங்கிச் செல்வோம் . மாடுபிடி வீரா்கள் முடிந்த அளவுக்கு களத்தில் இருப்பாா்கள். இல்லையெனில் வெளியே சென்றுவிடுவாா்கள். ஆனால், இப்போது பரிசுக்காக வீரா்களிடையே மோதல் ஏற்படுகிறது. நிகழ் ஆண்டில் முதல் பரிசுக்குரியவா் தோ்விலேயே ஆள்மாறாட்ட புகாா் எழுந்திருக்கிறது என்றாா்.

இந்த சா்ச்சைகளை தவிா்க்க அனைத்து காளைகளுக்கும் சமமான பரிசை அளிக்க வேண்டும். அதேபோல, மாடுபிடி வீரா்களுக்கு பெரிய பரிசுகளைத் தவிா்த்து அதை மாடுபிடி வீரா்களுக்கு சமமாகப் பகிா்ந்தளிக்கலாம். இல்லையெனில், வரும் காலங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி இப்போது இருப்பதைக் காட்டிலும் முழுமையாக வா்த்தக விளையாட்டாக மாறிவிடுவதைத் தவிா்க்க இயலாது என்கின்றனா் வீரா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com